Pages

Monday, March 10, 2014

கலர் கலராக எம் தேசத்தைக் காட்டிய மது குறும்படம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சகோதரன் பெலீசியன் இயக்கத்தில் “மது“ என்ற குறும்படம் வெளியாகியகியிருந்தது.
அதன் கமரா கலைஞனான “சந்துரு“ வின் சில காட்சி செதுக்கல்கள் மீள மீள பார்க்க வைத்தது. காரணம் அந்த நிறக் கலவை. கண்ணிற்குறுத்தல் இல்லாத பசுமை செதுக்கல் அது.
இயக்குனர் பெலிசியனின் முதல் குறும்படத்துக்கு (நம்ம ஊரு) எழுதிய விமர்சனம் குறையோடு அப்படியே கிடக்கிறது. சரி அதில் கூற வந்த முக்கியத்தையும் இதிலேயே குறிப்பிட்டு போகலாம். அந்த குறும்படம் சற்று நேரம் இழுத்தடிக்கப்பட்ட படம் என குற்றம் சாட்டப்பட்டாலும் அதன் கரு எனக்கு பிடித்திருந்தது அதை விட அந்த எழுத்து ஓடும் காட்சியிலேயே எம் பாரம்பரிய கலையைக் காட்டி அந்த படம் சொல்ல வந்த கருத்தை அங்கேயே சொல்லியிருப்பார்.
அதே போல இக்குறும்படத்திலும் காட்சிகளுக்காக அவர் தெரிவு செய்த இடம் அருமையானவையாகும்.
நடிப்பை சொதப்பாத பாத்திரங்களும் படத்தின் பிளசுக்கு காரணமாகும்.
ஆனால் நாயகனின் வயதும் தோற்றமும் சற்று உறுத்தலாக இருந்தாலும் நானும் ஒரு படைப்பாளி என்ற வகையில் கை வசம் எம்மிடம் இருக்கும் வளமே பரதை தீர்மானிக்கிறது என்பதை உணர்வேன். ஆர்ப்பாட்டமில்லாத இசையோடு அருந்திய மது மொத்தத்தில் ஒரு பசுமைப் புரட்சி

Monday, March 3, 2014

கண்களை கவர்ந்த “நெஞ்சுக்குள்ளே“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
(இது விமர்சனமல்ல... எனது பார்வை மட்டுமே)
கடந்த சில நாட்களுக்கு முதல் வெளியாகியிருந்த ஒரு காதல் படைப்புத் தான் “நெஞ்சுக்குள்ளே“ என்ற குறும்படமாகும்.
இந்தப்படத்தில் இயக்குனரிடம் பிடித்திருந்த விடயம் ஒன்று என்னவென்றால் எம்மில் பலர் யாழப்பாணத்தை ஒரு மங்கலான நிறத்துடனும் வறுமைக் கோடுகள் வன்முறை நிறைந்ததுமாகவே காட்டிக் கொண்டிருக்க அவரோ எல்லோருக்கும் ஒரு பணக்கார அழகிய யாழ்ப்பாணத்தைக் காட்டியிருக்கிறார். இதற்கு முன்னரும் “என்னுள் என்ன மாற்றமோ“ படத்தில் அவர் துணிந்து இறங்கிய விதத்துக்கு பாராட்டியிருந்தேன்.
முதலில் இதற்கொரு பாராட்டு.
மிக முக்கியமாக பாராட்டப்பட வேண்டியது ஒளிப்பதிவாகும். எமக்கிருக்கும் வளத்தில் படப்பிடிப்பாளன் தான் வெளிச்சத்தையும் கவனிக்க  வேண்டிய கட்டாயமிருக்கையில் அவர் காட்சிப் பக்கங்களை கையாண்ட விதம் மிகவும் பிடித்திருந்தது.
அத்துடன் பாத்திரங்களின் நடிப்பில் நொண்டியாக வந்து போகும் அந்த பாத்திரமும் (வின்சன்) ஒரு தடவை வந்து வக்கிர முகத்தை காட்டிப் போகும் அந்த கத்திக் குத்தாளனும் (யுரா) திரும்பி பார்க்க வைத்தார்கள்.
படத்தின் பல ஜதார்த்த மீறல்கள் திரைக்கதைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்பதுடன் சிந்துஜாவின் “உருகிடவா“ இசையை ரசித்து விட்டு எதிர் பார்ப்போடு பார்க்க போன எமக்கு “ஓநாயும் ஆட்டுக் குட்டியும்“ இசையை கேட்டதும் மனது ஒரு “திரில்லர்“ படத்துக்குள் நுழைந்து விட்டது.

அடுத்த விடயம் திரைக்கதை விடயம். கதையை இசைப்பிரியன் (லண்டன்) அவர்கள் வடித்திருந்தாலும் ஒரு ஆழமான காதலை சொல்ல முற்பட்ட கதைக்கு பாராட்டுக்கள். ஆனால் படம் பார்த்து முடித்து விட்டு கதையை மீள யோசிக்கையில் இதற்கு ஏன் இவ்வளவு நேரம் பிடித்தது என்று எண்ணத் தோன்றுகிறது. இதில் யாரிலும் குற்றம் கூற முடியாது காரணம் இயக்குனரும் திரைக்கதையாளரும் வேறு வேறாக இருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்

குறிப்பு - இதை விமர்சனமாக எழுதாமைக்கு காரணம். ஏற்கனவே என்னுள் என்ன மாற்றத்துக்கு விமர்சனம் சொன்னதால் தான் கவிமாறனுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி வந்ததாக கலையுலக வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். அத்துடன் நான் ஒரு படைப்பாளியான பின்னர் விமர்சனம் எழுதுவதில்லை. காரணம் படைப்பாளி என்பது வேறு விமர்சகன் என்பது வேறு (என் தனிப்பட்ட கருத்து) அப்புறம் ஏன் என்று தான் ஒரு சில விடயத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

Friday, February 28, 2014

மனசைத் தொட்ட “தூர தேசம்“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
எடுத்துக் கொண்ட கதைக்கருவுக்காக முதலில் எனது பாராட்டை இயக்குனருக்கு தெரிவித்துக் கொண்டு நகர்கிறேன்.
புலம் பெயர் தேசத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்த வலி.
அளவான பாத்திரங்கள். ஜதார்த்தத்தை மீறாத நடிப்பு.
மிக மிக முக்கியமாக வைக்கப்பட்டிருந்த frame கள் பிடித்திருந்தது. எந்த ஒரு கட்டத்திலும் ஆட்டம் காட்டாமல் கண்ணை உறுத்தாமல் இருந்தது.
முதல் காட்சியிலேயே இயக்குனர் ஒரு சில செக்கனுக்குள் நாயகனது பல செயற்பாடுகளை காட்டி முடித்திருக்கிறார். அதற்கேற்றாற் போல நாயகனும் இயல்பாக நடித்திருந்தார்.
குறுகிய செக்கனுக்குள் காட்ச மாற்றக் கூடாது என்ற விதிமுறை சொல்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ தெரியாது ஆனால் என்னால் எந்தவித உறுத்தலுமின்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது. இந்த இடத்தில் எடிட்டரும் பாராட்டப்பட வேண்டியவரே.
ஒரு விடயம் சின்ன உறுத்தலாக இருந்தது. ஒலிச் சேர்க்கை சரியாக கவனிக்கப்படவில்லை. மென்மையான ஒலியாகவும். ஒரு முறை வலப்பக்கத்தில் இருந்தும் ஒரு முறை இடப்பக்கத்தில் இருந்தும் வருவதால் ஹெட் போன் போட்டிருந்து பார்த்த நான் அடிக்கடி காட்சிக் களத்துக்கு வெளியே போய் வந்தது போல ஒரு உணர்வு எழுந்தது.
படக் குழுவினருக்கு என் உளப்பூர்வ வாழ்த்துக்கள்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா




Sunday, February 23, 2014

“இப்படியே விட்டு விடு“ ஒரு கருத்து சொன்ன குறும்படம்



பொதுவாகவே இந்தக் காதல் கதைகளை மையப்படுத்திய குறும்படங்கள் என்றால் புதிதாக என்னத்தை சொல்லப் போகிறது என்ற கேள்வியே பலரிடம் எழுகிறது.
ஆனால் பத்தில் ஒன்றாவது வித்தியாசமாக வந்து கண்களைக் கவர்கிறது. அண்மையில் ஈழத்தில் வந்த ஒரு சில படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம் (unfriend short film... ect ...) அந்த பட்டியலுக்குள் இப்படியே விட்டு விடு குறும்படம் அமைந்திருக்கிறது.
குறும்படங்களுக்குத் தேவையான அந்த அதிரடித் திருப்பம் லாவகமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
ஆரம்பம் வழமையான விடுதிக் காட்சியுடன் கொஞ்சம் சலிப்பூட்டும் விதமாக ஆரம்பித்திருந்தாலும் நாயகியின் குரல் ஒலிக்க ஆரம்பித்த இடத்தில் இருந்து குறும்படம் ஆரம்பிக்கிறது.
ஆனால் முன் காட்சிகளில் நுழைந்திருந்த சின்னச்சின்ன நகைச்சுவைகள் ஒரு தடவையாவது சிரிக்க வைத்தது (சீட்டாட்டத்தில் நடக்கும் சீரியஸ் பேச்சு முடிய ஒருத்தன் சோடா முடிந்ததுக்கு கவலைப்படுவது)
மொத்த்தில் சக நண்பர்களோடு விபரீத விளையாட்டு விளையாடக் கூடாதென்ற மிரட்டல் கருத்துடன் படம் மனதை தொட்டது.
படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் 
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

Monday, January 6, 2014

“தவறிப் பிறந்த தரளம்“ - மனதை நிரப்பிய தாராளக் குறும்படம்

Varunan  அண்ணாவின் a forgotten pearl குறும்பட சீடி கையில் கிடைத்தது. இப்போ தான் மன அமைதியான நேரம் என்பதால் போட்டு பார்த்தேன். ஏற்கனவே Iroshan சொல்லியிருந்தாலும். ஒரு சிறுவனின் போர் மனவடு, தந்தையின் குடும்ப குலைவு, தாயின் உடல் தேடல், அநாதரவான வெள்ளை உள்ளத்தின் நடத்தை அத்தனையையும் 10 நிமிடத்திற்குள் செப்பனிட்டு காட்டியிருப்பது அவரது கைதேர்ந்த தன்மையை காட்டுகிறது.
தந்தையாக வரும் தர்மலிங்கம் அண்ணாவின் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை வார்த்தெடுக்கப்பட்ட கலைஞர். ஹர்த்தால், எழுத்துப்பிழை போன்றன அதற்குச் சாட்சி.
பிரியாவின் நடிப்புத்துறை வளர்ச்சியானது மிகப்பெரும் வளர்ச்சியாகும். எனக்கு “என்னுள்ளே“ பாடல் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் பாடல் வந்து 2 வருடங்களாக முதலே அவர் உடலில் 10 வருடத்துக்கான மாற்றம் நிகழந்து விட்டது. உடலில் கவனம் செலுத்தினால் நிச்சயம் ஈழ சினிமாத் துறையில் பல வருடங்கள் இதே இடத்தை தக்க வைக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
சிறுவன் - அவனைப் பற்றி ஒரே ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாலே போதும் அவன் பாத்திரத்துக்கான ஆதாரமாகிவிடும் இறுதிக் காட்சியில் வெறுப்போடு விறு விறு என ஒரு நடை நடக்கிறான் பாருங்கள்.. அவன் தரையிலல்ல எம் மனதில் தான் நடக்கிறான்.

ுக்கியமாக ஒலிச் சேர்க்கை... படத்தின் கவனத்தை இசை திசை திருப்பிவிடக் கூடாது என்பதற்காக அவதானமாக கையாண்டதுடன் இந்த உலங்கு வானூர்தியை எம் மனங்களுக்குள்ளால் பறக்க விட்டிருக்கிறார். விருது கொடுப்பாளர் கண்ணுக்கு இப்படம் தட்டுப்படுமோ தெரியாது ஆனால் ஒரு குறும்பட ரசிகளை நிச்சயம் பூரணப்படுத்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து... வாழ்த்துக்கள் அண்ணா

Thursday, January 2, 2014

மொழியின் நிலை சொல்லும் அழகிய குறும்படம் “இழிநிலை“

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
தமிழ் என்பது எம் தாய் மொழி அதன் தாக்கம் நாகரிகத்தால் தொலைக்கப்பட்டாலும் உளவியலில் அதன் தாக்கம் எப்படி ஆளுமை செய்கிறது என்பதை ஒரு சின்னக் கதையைக் கருவை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படமாக “இழிநிலை“ அமைந்திருந்தாலும் அதன் திரை மொழி என்பது திரைக்கான கட்டுக் கோப்புடன் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இரு வெவ்வேறு கோணங்களில் பயணிப்பது போல காட்சி நகர்வு சென்றாலும் அவை சங்கமிக்கும் இடம் ஒரு திரைக்காட்சியின் பண்பட்ட இடமாகும் அந்த இடத்தை இயக்குனர் சரியாகக் கையாண்டிருக்கிறார்.
படத்தில் வந்து போன அத்தனை வசனங்களும் ஆழமானதும் அமைதியானதுமாக சென்றது படத்தின் ஓட்டத்தை சீர்குலைக்காமல் கொண்டு சென்றது எனலாம். அதற்கேற்றாற் போல் ஒத்தடம் கொடுப்பது போல இசை தொட்டுச் செல்கிறது.
கமராவும் இசையும் சங்கமித்த என்னைக் கவர்ந்த ஒரு இடம் இருக்கிறது கட்டாயம் அதை சொல்லியே ஆக வேண்டும். மாணவன் வகுப்பால் வெளியேறி வருகிறான். அப்போது கமரா எதிரே இருக்கும் சின்ன தூண்களுக்குப் பின்னால் இருக்கிறது. அவனது நகர்வுகளுக்காக கமரா நகரும் போது ஒவ்வொரு சிறு தூணும் குறுக்கறுக்கிறது. அதற்கேற்றற் போல இசை காதை நிரப்புகிறது. படத்தின் ஆரம்பத்தில் இது வருவதால் முதலில் உணர முடியாவிட்டாலும் படம் பர்த்தபின்னர் யோசித்தால் அக்காட்சியும் அவன் மனநிலையும் ஒத்துப் போவது தெரியும்.
(மிஸ்கின் பைத்தியமான எனக்கு அந்த இடம் அவரைத் தான் கண் முன் கொண்டுவந்தது)
தாயாக வருபவரது முகபாவம் சிறப்பாக இருந்தது.
மொத்தத்தில் இழிநிலை எனக்குப் பிடித்திருக்கிறது (தனிப்பட்ட கருத்து)
இயக்குனர் அகீபனுக்கும் அவர் குழுவுக்கும் பாராட்டுக்கள்

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா